டோக்கியோவில் நடைபெறும் ஜி-8 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். தனது பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்து இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அவர் முக்கிய பேச்சு நடத்துகிறார்.
ஜப்பானில் உள்ள ஒகாய்டோ தீவில் தங்கும் அவர் ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவு குறித்தும் அவர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ஜப்பான் புறப்படும் முன் புதுடெல்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங், இந்த மாநாட்டில் பல்வேறு சர்வதேச பிரச்சனைகளில் இந்தியாவின் கருத்துக்களை தாம் தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள பிரச்சனையில் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு நாடுகள் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தப் போவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜி-8 மாநாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பங்கேற்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவின் கருத்தை வலியுறுத்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியா தெரிவித்து வரும் கருத்துக்கள் கவனத்துடன் கேட்டறியப்படுகிறது என்றும், பல்வேறு உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவின் பங்கேற்பு தேவை என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஜி-8 மாநாட்டையொட்டி நடைபெறும் உலகின் முன்னணி பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் பங்கேற்று பருவ மாற்றம் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.