காஷ்மீர் எல்லையில் சண்டை : 6 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!
வெள்ளி, 4 ஜூலை 2008 (17:47 IST)
வடக்கு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பெருமளவில் ஊருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு வீரர்களுக்கும் நடந்த மோதலில் 6 வீரர்களும், 12 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 6 வீரர்களில் மூன்று பேர் இளநிலை அதிகாரிகள் என்று பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்து காஷ்மீரின் வடக்குப் பகுதியான சத்னா பகுதி வழியாக பெருமளவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி மேற்கொள்வதை பாதுகாப்பு வீரர்கள் கண்டனர்.
அவர்களை இடைமறித்து சரணடையுமாறு ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டுக் கொண்டும் பயங்கரவாதிகள் தப்பிக்க முயன்றனர். இதனையடுத்து சண்டை மூண்டது.
முதல் நாள் சண்டையில் 2 பயங்கரவாதிகளும், ஒரு இளநிலை அதிகாரியும் உயிழந்தனர். இரண்டாவது நாள் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுவரை நடந்த சண்டையில் மூன்று இளநிலை அதிகாரிகள் உட்பட 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கை இன்னமும் தொடர்வதாக பாதுகாப்பு அமைச்சக பேச்சாளர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பெருமளவிலான பயங்கரவாதிகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றது இதுவே முதல்முறை என்று கூறிய பேச்சாளர், 5 அல்லது 6 பயங்கரவாதிகள் இந்த வழியாக ஊடுருவியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.