அணு சக்தி: சமாஜ்வாடி தலைவர்களை சந்திக்கிறார் நாராயணன்!

புதன், 2 ஜூலை 2008 (13:48 IST)
அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் இடதுசாரிகள் மத்திய அரசிற்கு விடுத்துள்ள அச்சுறுத்தலையடுத்து, அது குறித்து விளக்கி ஆட்சிக்கு ஆதரவைப் பெற சமாஜ்வாடி கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்.

அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அடுத்த கட்ட நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கினால் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று இடதுசாரிகள் தெரிவித்துவிட்டனர்.

ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி8 மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ள முடிவெடுத்தால் அதையே தாங்கள் விதித்த நிபந்தனையை மீறியதாக எடுத்துக்கொண்டு ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று மார்க்ஸிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

இடதுசாரிகளின் எதிர்ப்பால் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தவிர்க்க உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை காங்கிரஸ் நாடியுள்ளது. அக்கட்சியும் அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள முன்வந்துள்ளது.
சமாஜ்வாடி கட்சிக்கு மக்களவையில் 39 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு கிடைத்தாலே ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள முடியும் என்றும், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றிட முடியும் என்றும் காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

இந்த நிலையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை விளக்கிட சமாஹ்வாடி கட்சித் தலைவர்களை தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இன்று மாலை சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, நாளை மறுநாள் நடைபெறும் ஐக்கிய தேச முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் அருசுக்கு ஆதரவு தருவது குறித்த தனது நீலையை சமாஜ்வாடிக் கட்சி தெரிவிக்கும். அதன் பிறகு இறுதி முடிவு எடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமாஜ்வாடி கட்சியின் முடிவைப் பொறுத்தே பிரதமரின் ஜப்பான் பயணம் முடிவாகும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் முதல் நடவடிக்கையாக பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் தனித்த கண்காணிப்பு ஒப்பந்த்த்தை ஜூலை 15ஆம் தேதிக்குள் முடித்துவிட மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்