லாரி வேலை நிறுத்தம் - சிதம்பரம் தலையிட கோரிக்கை

செவ்வாய், 1 ஜூலை 2008 (12:14 IST)
லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதை, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலையிட்டு உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ஏ.சக்திவேல் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் (ஜூலை 1) காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்கின்றனர். இதனால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் சரக்குகளை ஏற்றுமதி செய்யாவிட்டால் ஆர்டர்கள் ரத்து செய்யப்படும்.

ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்கனவே கச்சா பொருட்களின் விலை உயர்வாலும், மற்ற செலவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

உலக சந்தையில் இந்திய ஏற்றுமதி பாதிக்க‌ப்படாமல் இருக்க, உடனடியாக நிதி அமைச்சர் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி தொழில்களை காப்பாற்ற வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்