பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்: குலாம் நபி ஆசாத்!
திங்கள், 30 ஜூன் 2008 (21:13 IST)
மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில், எந்த நேரத்திலும் சட்டப் பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார் என்று ஜம்மு- காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
இதுகுறித்து அம்மாநில ஆளுநர் என்.என்.வோஹ்ரா-வை நேற்று தொடர்பு கொண்ட குலாம் நபி ஆசாத், சட்டப் பேரவையில் இப்போதும் தனக்குப் பெரும்பான்மை உள்ளதாகவும், அதை எந்த நேரத்திலும் நிரூபிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.
பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு கட்டடங்கள் அமைப்பதற்காக அமர்நாத் குகைக்கோயில் நிர்வாகத்திற்கு வனத்துறை நிலத்தை ஒதுக்கியதைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசிற்கு வழங்கி வந்த ஆதரவை, மொத்தம் 87 உறுப்பினர்களைக் கொண்டுள்ள சட்டப் பேரவையில் 18 உறுப்பினர்களைக் கொண்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டது.
மொத்தம் 21 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு சி.பி.எம். உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சைகள் 8 பேரும் ஆதரவளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள அமர்நாத் கோவில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்ட நிலம் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு மட்டும் போதாது, நிலத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது.