அணு சக்தி ஒத்துழைப்பு: நாடாளுமன்றத்தின் முடிவிற்கு கட்டுப்படுவோம் – பிரதமர்!

திங்கள், 30 ஜூன் 2008 (14:08 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துதற்கு முன் பன்னாட்டு அணு சக்தி முகமையுடனும், அணு தொழில்நுட்ப வணிகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்க அரசை அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியிலுள்ள தனது இல்லத்தில், வெப்ப நிலை மாற்றத்திற்கான பிரதமரின் பேரவை தயாரித்துள்ள, “வெப்ப நிலை மாற்றம் மீதான தேச நடவடிக்கைத் திட்டம” என்ற திட்ட நடைமுறை அறிக்கையை வெளியிட்டப் பிறகு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், “அணு சக்தி ஒத்துழைப்புத் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் முடித்துக் கொண்டு, அதனை நடைமுறைக்கு கொண்டுவருதற்கு முன்னர் அதனை நாடாளுமன்றத்தில் வைப்போம” என்று கூறினார்.

“இதற்கு முன்னரும் சொல்லியிருக்கின்றேன், இப்போது மீண்டும் சொல்கின்றேன், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அனுமதியுங்கள். அது முடிந்த பிறகு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவேன். அப்போது நாடாளுமன்றம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம்” என்று கூறினார்.

அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாம் சமரத்தை எட்ட முடியும், அது அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்வதாக அமையும் என்று கூறிய பிரதமர், ஒப்பந்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டால் தங்களுடைய ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்று இடதுசாரிகள் கூறியுள்ளனரே என்று கேட்டதற்கு, “அப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது அதனைப் பார்க்கலாம” என்று பதிலளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்