அந்தமான் தீவுகளில் இன்று காலை 10.05 மணியளவில் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமத்திய ரேகையிலிருந்து 11.3 டிகிரி வடக்கும், அட்சரேகை 91.3 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் இதன் மையம் இருந்ததாக வானில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் தீவுகளில் நேற்று மாலை 5.20 மணிக்கு முதல் பூகம்பம் தாக்கியது. இது சென்னையில் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியிருந்தது.
அதன் பிறகு 5.40 மணிக்கு மீண்டும் ஒரு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 11.40 மணியளவில் மீண்டும் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியிருந்தது.
தற்போது இன்று காலை 10.05 மணிக்கு மீண்டும் ஒரு மிதமான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து நேற்றைய 6.7 ரிக்டர் அளவு நில நடுக்கத்தை தொடர்ந்து 5 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இடையே இந்தோனேஷியாவின் நியாஸ் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரம் 7.45 மணி அளவில் மித நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5 என்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.