பணவீக்கம் 11.05 விழுக்காடாக உயர்ந்தது!

வெள்ளி, 20 ஜூன் 2008 (14:18 IST)
கடந்த பதிமூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் 11.05 விழுக்காடாக அதிகரித்தது.

மத்திய அரசு கடந்த 4ஆம் தேதி பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகரித்தது. இதனால் ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.05 விழுக்காடாக உயர்ந்துள்ளது

இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 8.75 விழுக்காடாக இருந்தது.

பணவீக்கம் பற்றிய தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே, பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் சரிய துவங்கின. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்தது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியும், மத்திய நிதி அமைச்சகமும் எடுக்கும் நடவடிக்கைகளால், எதிர்பார்க்கும் பலன் இருக்காது என்பதால், முதலீட்டாளர்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்ய துவங்கினர். இதனால் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிக அளவு குறைந்தன.

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 4.28 விழுக்காடாக இருந்தது.

ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல், உணவுப் பொருட்களின் விலை குறிப்பாக சமையல் எண்ணெய் விலையும், உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்ததே.

(முன்பு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 7.33% ஆக இருக்கும் என மதிப்பிட்டு அரசு அறிவித்தது. இது இறுதி கணக்கீட்டின் படி 7.95 விழுக்காடாக அதிகரித்துள்ளது. பணவீக்க விகிதம் 1993-94 ஆம் ஆண்டில் இருந்த விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது).

வெப்துனியாவைப் படிக்கவும்