விலை உயர்வை கட்டுப்படுத்தவே ரிசர்வ் வங்கி நடவடிக்கை: சிதம்பரம்!

புதன், 18 ஜூன் 2008 (20:09 IST)
விலை உயர்வின் காரணமாக அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே, வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தது, வங்கிகளுக்கு அளிக்கும் குறைந்த கால கடன்களின் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தியது போன்ற நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.

புதுடெல்லியில் இன்று ரிசர்வ் வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிதம்பரம், ரிசர்வ் வங்கியின் இவ்விரு நடவடிக்கைகளின் காரணமாக பணப் புழக்கம் ரூ.27,000 கோடி அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை அடுத்து வாடிக்கையாளர்களுக்கும், தொழிலகங்களுக்கும் அளிக்கும் கடன்களின் மீதான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தும்.

கடன்களின் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்படுவதால் தொழிலக உற்பத்திச் செலவீனம் கூடுமென்றாலும், பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்படுவதால் பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தேவை குறையும் என்பதால் விலைவாசி குறையும்.

மே மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் ரூபாயின் பணவீக்கம் 8.75 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் ஜூன் 7ஆம் தேதியுடன் முடிவுறும் வாரத்தில் பணவீக்கம் 9 விழுக்காட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்