மாவோயிஸ்டுகள் இருவருக்கு மரண தண்டனை!
திங்கள், 9 ஜூன் 2008 (15:50 IST)
காவல் நிலையத்தைத் தாக்கி ஆயுதங்களைக் கொள்ளையடித்ததுடன், இருவரைக் கொலை செய்த வழக்கில் மாவோயிஸ்ட்டுகள் இருவருக்கு மரண தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள சபிலாபூர் காவல் நிலையத்தை சூறையாடிய வழக்கில், சுரேந்திர மன்ஜி, சரயு மன்ஜி ஆகிய இருவருக்கு இன்று மரண தண்டனை விதித்து விரைவு நீதிமன்ற நீதிபதி பைரேந்திர சிங் தீர்ப்பளித்தார்.
சபிலாபூர் காவல் நிலையத்தை, பயங்கர ஆயுதங்களுடன் வந்த மாவோயிஸ்டுகள் கடந்த 11.12.2005 அன்று நள்ளிரவில் சூறையாடினர். அப்போது காவல் துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் 450 சுற்றுகளுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில், காவலர் ஒருவரும், லாக்கப்பில் இருந்த கைதி ஒருவரும் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்தனர். 3 காவலர்களும், சமையல்காரர் ஒருவரும் படுகாயமடைந்தனர்.
மோதலின் முடிவில் காவலர்கள் சரணடைந்தனர். காவலர்களின் ஆயுதங்களைக் கொள்ளையடித்ததுடன், புதிதாகக் கட்டப்பட்டிருந்த காவல் நிலையக் கட்டடத்திற்கும் தீ வைத்தனர்.
இவ்வழக்கில் 13 பேரின் மீது குற்றச்சாற்று பதிவு செய்யப்பட்டது. 7 பேர் தகுந்த ஆதாரமில்லாததால் விடுதலை செய்யப்பட்டனர். 4 பேர் மீதான வழக்கு தனியாக நடந்து வருகிறது. மீதமுள்ள இருவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.