பெட்ரோல் விலை உயர்வு சரியான நடவடிக்கையே - ஒ‌ய்.‌‌வி. ரெட்டி!

வெள்ளி, 6 ஜூன் 2008 (17:30 IST)
உலக‌ச் சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை எதிர்பார்த்த அளவை விட அதிகரித்துள்ளதா‌ல் பெட்ரோல், டீசல் விலைகளை அரசு உயர்த்தியது சரியான நடவடிக்கையே என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி கூறினார்.

ஹைதராபாத்தில் நேற்று என்.ஜி.ரெங்கா விவசாய‌க் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ‌பிறகு செய்தியாளர்களிடம் பே‌சிய ரெட்டி, மத்திய அரசின் பெட்ரோ்ல விலையை உயர்த்தி, எல்லா தரப்பினரும் சுமையை பகிர்ந்து கொள்ளும்படி நடவடிக்கை எடுத்துள்ளது. இது சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்

நாம் உலக அளவில் ஒரே நேரத்தில் உணவு, நிதி சந்தை, கச்சா எண்ணெய் ஆகிய மூன்று விதமான பிரச்சனைகள் பெரிய அளவில் ஏற்பட்டு இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அவரிடம் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் எண்ணெய் கடன் பத்திரங்களுக்கு (ஆயில் பான்ட்) வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு வைக்க பயன்படுத்தும் வகையிலான அந்தஸ்து வழங்கப்படுமா என்று கேட்டதற்கு, ரிசர்வ் வங்கி, வங்கிகளின் குறைந்தபட்ச இருப்பின் அடிப்படை நோக்கத்தை பராமரிக்கும் என்று கூறினார்.

மேலும், கச்சா எண்ணெய் விலை ஒரே மாதிரியாக இருக்காது எனபது எதிராபாரதது அல்ல. இதன் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதன் விலை எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது.

உலக அளவில் தற்போதைய சூழ்நிலை இதற்கு முன் இல்லாத வகையில் மிக வித்தியாசமாக இருக்கின்றது. ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கையில் அறிவித்தது போல், ரிசர்வ் வங்கி உலக அளவிலும், உள்நாட்டிலும் ஏற்படும் வளர்ச்சி, பணவீக்கம், நிதி சந்தையின் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த அந்நிய செலவாணி கையிருப்பை பயன்படுத்துவது உட்பட எல்லா நடவடிக்கையும் எடுக்க தயாராக உள்ளோம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்கள் பலமாக உள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி அளவு 8 முதல் 8.5 விழுக்காடாக இருப்பது பருவமழை பெய்வதை பொறுத்து இருக்கும். மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்திய சந்தையில் அதிக அளவு பாதிப்பு இல்லை என்று‌ம் ரெ‌ட்டி கூறினார்.

பண்டக சந்தையில் சமீபத்தி்ல உணவுப் பொருள் உட்பட பல்வேறு பொட்களின் விலை உயர்வு பற்றியும், அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது பற்றி ரெட்டி கூறுகையில், இப்போது எல்லா உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களை தாவர எரிசக்தி எண்ணெய் (பயோ-ப்யூல்) தயாரிக்க திருப்பி விடப்படுகிறது. இது பசியுடன் உள்ள வயிறு நிரம்புவதை விட, வாகனங்களின் எரிபொருள் டாங்க் நிரம்பினால் போதும் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

பல நாடுகளில் உணவு மற்றும் விவசாய விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சரியான ஊக்கத்தொகை கொடுக்கப்படுவதில்லை.

உலக அளவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் அரிசி, கோதுமையின் விலை ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இதன் விலை பத்தில் ஒரு மடங்குதான் உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் குறைந்த அளவுதான் விலை உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் இனி வரும் மாதங்களில் உணவு பொருட்களின் விலை குறையும்.

கோதுமை கொள்முதல் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. 90 ஆம் ஆண்டுகளில் இருந்து நெல் உற்பத்தி அதிகரிக்காமல் இருந்தது. 2005-06 ஆம் ஆண்டில் இருந்து நெல் உற்பத்தியில் முன்னேற்றம் காணப்படுகிறது.

அதே நேரத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி அதிகரிக்காமல் உள்ளது. இதை இறக்குமதி செய்ய வேண்டியதுள்ளது.

உலக அளவில் சர்க்கரை உற்பத்தியின் இந்தியா முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதன் உற்பத்தி 2005-06 இல் இருந்து அதிகரித்துள்ளது. இந்த வருடமும் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று ரெட்டி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்