மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வில் மாற்றம்!

புதன், 4 ஜூன் 2008 (13:15 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான 6-வது சம்பள கமிஷன் மத்திய அரசு ஊழியர்களுக்கு சராசரியாக 28 சதவீதம் சம்பளம் உயர்த்த பரிந்துரை செய்தது.

இந்த சம்பள உயர்வை கடந்த 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டும். இதன் படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அந்த நிலுவைத் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது.

இத்தகைய சம்பள உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடி கூடுதல் செலவாகும். தவிரவும் நிலுவைத் தொகையை வழங்க ரூ.18 ஆயிரத்து 60 கோடி தேவைப்படுகிறது.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையிலான பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில், அரசு ஊழியர்களுக்கான 6-வது சம்பள கமிஷன் அறிக்கைப்படி நிலுவைத் தொகையை ஒட்டு மொத்தமாக வழங்கினால் விலை வாசி உயர்வு மேலும் அதிகரிக்கும். பண வீக்கமும் கூடும்.

எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை படிப்படியாக வழங்க வேண்டும். மேலும் இந்தத் தொகையின் ஒரு பகுதியை தொழிலாளர் நல நிதியில் சேர்க்க வேண்டும்.

நிலுவைத் தொகையை ஒரேயடியாக வழங்கினால் உற்பத்தி பொருட்கள் மற்றும் நுகர் பொருட்கள் விலை உயர்ந்து விடும்.

தவிரவும் இதற்கு முன்பு சம்பள கமிஷன் பரிந்துரை செய்த நிலுவைத் தொகைகள் படிப்படியாகத் தான் வழங்கப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்