இதுகுறித்து திருவனந்தபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சபரிமலையில் மகர விளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்று கண்டறிய விசாரணை நடத்தப்படும். இப்பிரச்சனையில் பக்தர்களின் நம்பிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது" என்றார்.
கேரள தேவசம் போர்டு அமைச்சர் ஜி.சுதாகரன் கூறுகையில், "மகர விளக்கு மனிதர்களால் ஏற்றப்படுகிறது என்பது அரசிற்குத் தெரியும். மகர விளக்கு ஏற்றப்படும் பகுதிக்கு செல்வது மிகவும் கடினமாகும்.
இஸ்லாமிய மக்கள் சந்திரனின் பிறைவடிவை பார்த்து, விழாவை தீர்மானிப்பது போன்ற ஒரு நிகழ்வுதான் இது. பக்தர்களின் நம்பிக்கையில் கைவைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை" என்றார்.
முன்னதாக, அய்யப்பன் கோவில் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு சார்பில் அவரின் பேரனும் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர் வெளியிட்ட அறிக்கையில், "மகர விளக்கு வேறு. மகர ஜோதி வேறு. மகர ஜோதி என்பது மகர சங்கராந்தி அன்று கிழக்கில் தோன்றும் நட்சத்திரம் ஆகும்.
மகர விளக்கு என்பது, பழங்காலத்தில் அய்யப்பனின் மூலஸ்தானமாக இருந்த பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படும் விளக்காகும். மகர விளக்கு ஏற்றும் வழக்கம் பரசுராம முனிவரால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதை நினைவூட்டும் விதமாகத்தான் இப்போது அங்கு விளக்கு ஏற்றப்படுகிறது. காடுகளில் வசித்த பழங்குடி மக்களால் இந்த வழக்கம் பல நூற்றாண்டுகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
மகர ஜோதியும், மகர விளக்கும் ஒன்று என்று நினைக்கும் ஒரு சிலரின் தவறான கருத்து காரணமாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இது தேவையில்லாதது. இந்த இரண்டு விஷயங்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்.
மகர விளக்கு என்பது கடவுள் அய்யப்பனுக்கு வழங்கப்படும் ஒரு பாரம்பரிய தீப ஆராதனை. மற்றபடி இதில் எந்த ரகசியமும் இல்லை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.