குஜ்ஜார்கள் போராட்டத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி!
வெள்ளி, 30 மே 2008 (16:15 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஸ்வைமதபூர் மாவட்டத்தில் இன்று குஜ்ஜார் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தங்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து கேட்டுப் போராடி வரும் குஜ்ஜார்கள் இன்று ஸ்வைமதபூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உசாலி டாரா என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களைச் சமாதானப்படுத்த காவல்துறையினர் முயன்றபோது இருதரப்பிற்கும் இடையில் மோதல் உருவானது. காவலர்களின் மீது போராட்டக்காரர்கள் கற்களையும், கட்டைகளையும் வீசித் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து கூட்டத்தைக் கலைப்பதற்காக தடியடி நடத்திய காவலர்கள், பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் ரப்பர் குண்டுகளால் சுட்டுள்ளனர். ஆனால் வன்முறை எதற்கும் கட்டுப்படாமல் போகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் கனகியா லால், ரதிஷியாம் ஆகிய இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், குஜ்ஜார் போராட்டத்தினால் உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலை குறித்து ஆராய உயர்மட்டக் குழுக் கூட்டத்தை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் டெல்லியில் கூட்டியுள்ளார்.
இக்கூட்டத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், உள்துறை செயலர் மதுக்கூர் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.