பெட்ரோல் விலை: முடிவெடுக்காமல் அமைச்சர்கள் குழுக் கூட்டம் தள்ளிவைப்பு!
புதன், 28 மே 2008 (20:33 IST)
புது டெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வினால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நடந்த அமைச்சர்கள் குழுக் கூட்டம், எவ்வித முடிவும் எடுக்காமல் தள்ளிவைக்கப்பட்டது.
மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் டெல்லியில் நடந்த இக்கூட்டத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, திட்டக் குழுத் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவது தொடர்பாக ஒரு மணி நேரம் விவாதம் நடந்தது.
இதையடுத்து வெளியில் வந்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்தார். எனவே, இக்கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று கருதப்படுகிறது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வு தொடர்பான இந்த அமைச்சர்கள் குழுக் கூட்டம் நாளையும் நடக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்போது, கச்சா எண்ணெய் இறக்குமதிக்குப் பணம் இன்றி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தவிக்கும் சூழல் உருவாவதைத் தவிர்ப்பதற்காக, பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்த வேண்டியது உள்ளிட்ட வழிமுறைகளை அரசிற்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முன்பு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.