கடாரா கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளிகள்: டெல்லி நீதிமன்றம்!
புதன், 28 மே 2008 (20:25 IST)
ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் நிதிஷ் கடாரா என்பவர் கொல்லப்பட்ட வழக்கில், உ.பி. அரசியல்வாதி டி.பி.யாதவின் மகன் விகாஸ் மற்றும் அவரின் உறவினர் விஷால் யாதவ் ஆகியோர் குற்றவாளிகள் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விகாஸ், விஷால் மீது கொலை, கடத்தல் மற்றும் வழக்கின் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும், இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரவீந்தர் கெளர் கூறினார்.
நிதிஷ் கடாரா கடந்த 2002 பிப்ரவரி 16 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். தனது சகோதரி பாரதி யாதவுடன் நிதிஷ் கடாரா நெருங்கிப் பழகுவதை விரும்பாத விகாஸ், நிதிஷ் கடாராவைக் கொலை செய்ததாகக் காவல்துறை தரப்பில் குற்றம் சாற்றப்பட்டது.
முன்னதாக கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரி விகாஸ், விஷால் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.