கூட்டுப் புலனாய்வுக் கழகம் அவசியம்: நாடாளுமன்றக் குழு!
செவ்வாய், 27 மே 2008 (17:12 IST)
நமது நாடு முழுவதும் பரவியுள்ள பயங்கரவாத சக்திகளை முறியடிக்க கூட்டுப் புலனாய்வுக் கழகம் ஒன்றை ஒருவாக்க வேண்டியது அவசியம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்கு (சி.பி.ஐ.) கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தி உள்ளது.
சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, மாநிலங்களவையில் சமர்ப்பித்த தனது 24ஆவது அறிக்கையில், மாநிலங்களுக்கு இடையிலான குற்றங்களையும், பயங்கரவாதம் தொடர்பான எல்லா வழக்குகளையும் விசாரிக்கும் அமெரிக்காவின் கூட்டு விசாரணைக் கழகத்தை (எஃப்.பி.ஐ.) ப் போல நமது மத்தியப் புலனாய்வுக் கழகத்தை (சி.பி.ஐ.) மாற்றியமைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து அக்குழுவின் தலைவர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில், "கூட்டுப் புலனாய்வுக் கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே முதல் தேவை. அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தற்போது மத்தியப் புலனாய்வுக் கழகத்தை மத்தியப் புலனாய்வு மற்றும் விசாரணைக் கழகம் என்று மாற்றியமைக்க வேண்டும்" என்றார்.
மேலும், பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் மாநிலக் காவல்துறையிடம் இருந்து மத்தியப் புலனாய்வுக் கழகத்திற்கு விசாரணையை மாற்றுவதற்கு ஆகும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில், மத்தியப் புலனாய்வுக் கழகத்தை ஒரு முழுமையான விசாரணைக் கழகமாக மாற்றி சிறப்பு அதிகாரங்களை வழங்க வேண்டும்.
இதன் மூலம் பயங்கரவாத வழக்குகளில் மத்தியப் புலனாய்வுக் கழகம் நேரடியாகத் தலையிட்டு முழுமையாக விசாரணை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.