கர்நாடக தேர்தலில் அதிக பணப்புழக்கம்: கோபால்சாமி!
திங்கள், 26 மே 2008 (10:48 IST)
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அரசியல் கட்சிகளிடையே அதிக அளவிலான பணப்புழக்கம் இருந்ததாக தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. எனினும், தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிகளையும் மீறி அதிக அளவிலான பணப்புழக்கம் நடமாடியதாக புகார்கள் எழுந்தன.
தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த தேர்தலில் விதி மீறல்கள் சிறிய அளவிலேயே இருந்தன. ஆனால், மிக அதிகமான அளவில் பணப் புழக்கம் இருந்தது. இதை தேர்தல் ஆணையத்தால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது.
கணக்கில் காட்டப்படாத பணம், கறுப்பு பணம் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வரை இது போன்ற பண புழக்கத்தை தடுக்க முடியாது. நாடு முழுவதும், தொகுதி மறு சீரமைப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிவடைந்து விடும். எனவே, அதற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது என்றார் கோபால்சாமி.