தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரி போராடிவரும் குஜ்ஜார் நடவடிக்கைக் குழு, இராஜஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது.
தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது முறையாக போராட்டத்தைத் துவக்கியுள்ள குஜ்ஜார் சமூகத்தினருக்கும் காவல் துறையினருக்கும் நடந்த மோதலையடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 36 பேர் உயிரிழந்தனர்.
டெளஸாவில் நேற்று நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 12 பேரின் சடலங்களுடன் பில்லிப்புரா இரயில் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடத்தி வரும் குஜ்ஜார் நடவடிக்கைக் குழுத் அமைப்பாளர் கர்னல் கிரோடி சிங் பைன்ஸ்லா, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜி விடுத்த அழைப்பை நிராகரிப்பதாக கூறிவிட்டார்.
இதற்கிடையே தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தியும், அரசைக் கண்டித்தும் முழு அடைப்பு நடத்துமாறு குஜ்ஜார் அமைப்புகள் விடுத்த அழைப்பை அடுத்து டெளஸா உள்ளிட்ட 12 நகரங்களில் முழு அடைப்பு நடந்து வருகிறது.