தங்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி ராஜஸ்தான் மாநிலத்தின் குஜ்ஜார் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
பாரத்பூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்திய குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென காவல்துறை ஜீப் இரண்டிற்கு தீவைத்து வன்முறையில் இறங்கினர். மேலும் காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். ஒரு காவலர் இதில் பலியானார்.
நிலைமையை கட்டுபடுத்த கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் பதட்டம் அடங்கவில்லை தொடர்ந்து காவல்படையினர் மீது கல்வீச்சி தாக்குதல் நடத்தினர். இதனால் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 15 பேர் பலியானதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதிக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தங்கள் கோரிக்கைய் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் நீடிக்கும் என்று குஜ்ஜார் இனத்தலைவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில அரசு குஜ்ஜார் இனத்தவர் மேம்பாட்டிற்காக சிறப்பு தொகையாக ரூ.282 கோடி அறிவித்திருந்தது. ஆனால் தங்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிற்கு மாநில அரசு பரிந்துரை செய்யாமல் இந்த நிவாரணத் தொகையை ஏற்கமுடியாது என்று குஜ்ஜார் இனத் தலைவர்கள் மறுத்துள்ளனர்.