பெட்ரோல் விலை உயருமா?

வியாழன், 22 மே 2008 (16:59 IST)
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் முயற்சியில், பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலையை உயர்த்துவது பற்றியும் பரிசீலிக்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா கூறினார்.

உலக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 1 பீப்பாய் விலை 130 டாலராக அதிகரித்தது.

ஏற்கனவே பெட்ரோலிய நிறுவனங்கள் புதிய சமையல் எரிவாயு இணைப்பு கொடுப்பதில்லை என்று அறிவித்துள்ளன. இதற்கான அனுமதி கேட்டு மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளன. அத்துடன் சென்னை, மும்பாய், டெல்லி, கல்கத்தா ஆகிய பெருந்கரங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யும் ஆலோசனையிலும் உள்ளன.

இந்நிலையில் இன்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிடம் செய்தியாளர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்று கேட்டதற்கு, “இந்த நிலையில் நான் விலை உயர்த்தப்படும் என்றோ அல்லது உயர்த்தப்படாது என்றோ கூறுவதற்கில்லை. நாங்கள் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களை காப்பாற்றுவதற்கு எடுக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளை பற்றியும் ஆலோசித்து வருகின்றோம்.

இதன் நலன்களை காப்பதற்கு சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதே நேரத்தில் பொதுமக்களின் நலனும் காக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு தினசரியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது போல், பெட்ரோல் விற்பனை செய்யும் அளவிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படாது. நாங்கள் இது மாதிரியான நுகர்வோருக்கு எதிரான செயலை செய்ய மாட்டோம். நான் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் சேர்மன் அசோக் சின்காவிடம் விசாரித்தேன். அவர் இந்த மாதிரியான முயற்சி இல்லை என்று உறுதியாக தெரிவித்தார” என்று அமைச்சர் முரளி தியோரா பதில் கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவையின் கூட்டம் நாளை நடைபெறும் என்று தெரிகிறது. இதில் பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து அமைச்சர் முரளி தியோராவிடம் கேட்டதற்கு, இதை அவர் உறுதிப்படுத்தவும் இல்லை, அதே நேரத்தில் மறுக்கவும் இல்லை.

அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் 5 வரை உயர்த்தப்படலாம் என்று பெட்ரோலிய நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

(பாரத் பெட்ரோலிய நிறுவனம், பெட்ரோலிய விற்பனை நிலையங்களுக்கு வழங்கும பெட்ரோல், டீசலின் அளவை குறைக்க போவதாகவும், சென்ற வருடம் குறிப்பிட்ட மாதத்தில் வாங்கிய பெட்ரோல், டீசலின் அடிப்படையில், இவற்றை தற்போது விற்பனை செய்ய பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு கொடுக்கப்போவதாக செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது)

வெப்துனியாவைப் படிக்கவும்