காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் 30 அப்பாவிகள் பலி!
வியாழன், 22 மே 2008 (14:07 IST)
ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்களுக்கு இதுவரை 30 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பொதுமக்கள் பலி விகிதம் 3 மடங்கு குறைவாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
"தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு பலியாகும் பொதுமக்களின் எண்ணிக்கை 3 மடங்கு குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 20 வரை அப்பாவிகள் 30 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 90 அப்பாவிகள் பலியாகியிருந்தனர்" என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதாக பி.டி.ஐ. நிறுவனம் தெரிவிக்கிறது.
தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு எல்லாத் தரப்பிலும் கடந்த மே 20 வரை 187 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 289 பேர் பலியாகியிருந்தனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிரவாதிகளின் தாக்குதல்கள் சிறிதளவு அதிகரித்துள்ளது. சம்பா, தண்ட்கார், டர்குன்டி, பூஞ்ச், குப்வாரா பகுதிகளில் அதிகமான மோதல்கள் நடந்துள்ளன.
கடந்த 2006 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் 158 அப்பாவிகள், 58 பாதுகாப்புப் படையினர், 225 தீவிரவாதிகள் உள்பட 441 பேர் கோல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.