ராஜீவ் காந்தியின் 17ஆவது நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி!
புதன், 21 மே 2008 (16:03 IST)
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 17ஆவது நினைவு நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் ஆகியோரும் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா வத்ரா ஆகியோரும் வந்திருந்து தங்கள் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தின் இறுதியில், 1985 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஆற்றிய உரை அவரின் நினைவாக ஒளிபரப்பப்பட்டது.
சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்களும் இப்பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.