கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 127 ஆக உயர்வு!
செவ்வாய், 20 மே 2008 (21:25 IST)
தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் இன்று பலியானதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கர்நாடகத்திலும் கள்ளச் சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக எல்லையில் உள்ள ஆனைக்கல் தாலூகாவில் சர்ஜாபூர், அட்டிபெலே, ஹெப்பகோடி ஆகிய கிராமங்களில் நேற்று கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலியானதுடன், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 8 பேர் இன்று பலியானதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூருவில் இன்று 15 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. கோலாரில் இன்று 11 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆனைக்கல், அட்டிபெலே, ஹோஸ்கோட்டே ஆகிய கிராமங்களில் கள்ளச்சாராய உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளனவா என்று காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக விசாரணை நடத்திய கர்நாடக மாறில மனித உரிமைகள் ஆணையம், "அதிகாரிகள் தவறே இந்தச் சம்பவத்திற்கு முக்கியக் காரணம்" என்று கூறியுள்ளது.
ஆணையத்தின் தலைவர் எஸ்.ஆர்.நாயக் மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார். சிகிச்சை பெறுபவர்களைக் கவனிப்பதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கர்நாடக அரசு நியமித்துள்ளது.