இந்திய- பாகிஸ்தான் நம்பிக்கை வலுப்பட பயங்கரவாதம் ஒழிய வேண்டும்: பிரணாப் முகர்ஜி!
செவ்வாய், 20 மே 2008 (18:09 IST)
இந்தியா- பாகிஸ்தான் இடையே நம்பிக்கையும் ஒத்துழைப்பும் வலுப்பட பயங்கரவாதமும் வன்முறையும் ஒழிய வேண்டியது அவசியம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து போரிடுவதுதான் இருநாடுகளின் எதிர்காலத் திட்டமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான 5 ஆவது கட்ட அமைதிப் பேச்சு இன்று இஸ்லாமாபாத்தில் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக நாளை (புதன்கிழமை) பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேசியுடன் இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகிறார்.
இதற்காக இன்று இஸ்லாமாபாத் வந்தடைந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைதி, நிலைத்தன்மை, பொருளாதார மேம்பாடு தொடர்பான பல்வேறு விடயங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்பட பாகிஸ்தானில் உருவாகியுள்ள புதிய ஜனநாயகமான சூழ்நிலை உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அரசியல், பொருளாதாரம், மண்டல விவகாரங்கள் தொடர்பான பல்வேறு பரிந்துரைகள் பரிசீலனைக்காகவும் செயல்படுத்துதலிற்காகவும் காத்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் குரேசியுடனான எனது சந்திப்பில் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மேம்பாடு ஆகியவை ஒருங்கிணைக்கப்படும். இது ஆறாவது சுற்றுப் பேச்சுக்களுக்கு அடித்தளமாக அமையும்.
நம்பிக்கை, ஒத்துழைப்பு, இயல்பான நடைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் அடுத்தகட்டப் பேச்சைத் துவங்கவுள்ளோம். இதனால், பயங்கரவாதம், வன்முறை மற்றும் அவற்றால் ஏற்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார் பிரணாப் முகர்ஜி.