அத்தியாவசிய பொருட்கள் சட்டம்- பா.ஜ.க. எதிர்ப்பு!

செவ்வாய், 20 மே 2008 (16:40 IST)
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திரும்ப பெறக்கோரி வியாபாரிகள் நடத்தும் போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி ஆதரிக்கும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அர்ஜூன் மு‌ண்டா கூறினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. வியாபாரிகள் பொருட்களை பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்துவதாக கூறப்படுகிறது.

உணவுப் பொருட்களை பதுக்குவதை கட்டுப்படுத்தவும், தாராளமாக கிடைக்க செய்ய அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த சட்டத்தை ஜார்கண்ட் மாநில அரசு அமல்படுத்த முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை ஏப்ரல் 17 ஆ‌ம் தேதி வெளியிட்டது.

இதன்படி உணவுப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி பெறவேண்டும். உணவு தா‌னியங்களை குறிப்பிட்ட அளவு மட்டுமே இருப்ப வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இதன் இருப்பு பற்றிய விபரம் பராமரிக்க வேண்டும். குறிப்பிட்ட உணவுப் பொருட்களை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும்.

இந்த சட்டத்தை வியாபாரிகள் அங்கம் வகிக்கும் ஜார்க‌ண்ட் வர்த்தக மற்றும் தொழில் சங்கம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனை திரும்ப‌ப் பெற‌க்கோரி, வருகின்ற 28ஆ‌ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளது.

வியாபாரிகளின் கடை அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவி‌ப்போ‌ம் என்று பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.

ராஞ்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் அர்ஜூன் மு‌ண்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சட்டத்தில் ஒவ்வொரு வியாபாரியும் 250 குவின்டாலுக்கும் (1குவின்டால்- 100 கிலோ) அதிகமாக உணவு தா‌னியம் கையிருப்பு வைத்துக் கொள்ள கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் குறைந்த அளவே உணவு தா‌னியங்களை இருப்பில் வைத்துக் கொள்வார்கள். இதனால் விலை அதிகரிக்கும். சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் கள்ளச் சந்தையும் உருவாகும்.

இந்த சட்டத்தை 1984 ஆம் ஆண்டில் அமல்படுத்திய போது ஒரு வியாபாரி 1,000 குவின்டால் வரை இருப்பு வைத்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. இதன் பிறகு 24 ஆண்டுகளுக்கு பிறகு அத்தியாவசிய பொருட்கள் பாரமரிப்பு சட்டம் அமல்படுத்தும் போது, மிக குறைந்து அளவே இருப்பு வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் போராட்டம் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று அர்ஜூன் மு‌ண்டா கூறினார்.

ஜார்க‌ண்ட் வர்த்தக மற்றும் தொழில் சங்க தலைவர் மனோஜ் நரேடி கூறுகையில், அத்தியாவசிய பொருள் பராமரிப்பு சட்டத்தின் விதிமுறைகளை எளிமைப்படுத்தும்படி முதலமைச்சர் மதுகோடா, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கு துறை அமைச்சர் கமலேஷ் குமார் சிங் ஆகியோருக்கு மனு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதே நேரத்தில் மற்ற மாநிலங்களில் இருந்து உணவு தா‌னியங்களை வாங்கி வருவதில்லை என்று வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர் பொகாரோ, தன்பாத் நகரங்களை சேர்ந்த வியாபாரிகள், ஏற்கனவே உணவு தா‌னியங்களை கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டனர். .

ஜார்கண்ட் மாநிலத்தில் கோதுமை, அரிசி உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்த மாநிலத்திற்கு தேவையானதில் 90 விழுக்காடு மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா,ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத்,மேற்கு வங்கம், பிகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்