இடஒதுக்கீடு : கொல்க‌‌த்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை!

வெள்ளி, 16 மே 2008 (15:32 IST)
மத்திய அரசின் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் படிப்புகளுக்கான இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதைத் தடை செய்த கொல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

"கொல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீட்டிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது" என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.

தடையை நீக்கி உத்தரவிட்ட இந்த நீதிபதிகள் குழு "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மேல் கொல்கட்டா உயர் நீதிமன்ற‌த்‌தி‌ன் ‌தீ‌ர்‌ப்பு இரு‌க்க முடியுமா என்ன?" என்று கேள்வி எழுப்பியது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லும் என்று அனுமதியளித்த பிறகு உயர் நீதிமன்றம் அதனை நடைமுறைப்படுத்துவதை எவ்வாறு தடை செய்யமுடியும் என்று கேட்டனர்.

எனினும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவுகளுக்கு‌ட்பட்டு இச்சட்டப்பிரிவின் கீழ் மத்திய கல்வி நிலையங்களில் முதுகலை பட்டப்படிப்பிற்கான அனுமதிகள் தற்காலிகமானதே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக கொல்கட்டா, டெல்லி, மும்பை உயர் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் நடவடிக்கைகளுக்கும் அது தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் மனு செய்துள்ளவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்