ஜெய்ப்பூர் : சந்தேக நபரை நேரில் பார்த்ததாக வாக்குமூலம்!

வெள்ளி, 16 மே 2008 (12:48 IST)
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கும் நபர்களின் வரைபடத்தை காவல்துறை வெளியிட்டிருந்தது. அதில் ஒரு நபரை நேரில் பார்த்ததாக உதய்பூரைச் சேர்ந்த உணவு விடுதி உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

உத‌ய்பூரில் உணவு விடுதி நடத்தி வரும் கமல் ஜோஷி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் காவல்துறை வரைபடத்தில் இருந்த நபர் தனது உணவு விடுதிக்கு வந்து சென்றதாக காவல்துறை விசாரணையில் கூறினார்.

அந்த மர்ம நபருடன் ஒரு இளம்பெண்ணும் வந்ததாகவும், அந்தப் பெண் முதலில் புடவை கட்டியிருந்ததாகவும், பிறகு உணவு விடுதியை விட்டு புறப்படுகையில் சல்வார் கமீஸ் உடைக்கு மாறியதாகவும் அவர் தெரிவித்ததாக காவல்துறை கூறியுள்ளது. ஆனால் அவர்கள் உணவு அருந்தவில்லை என்று விடுதி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த இருவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக சூரஜ்போல் காவல் நிலைய அதிகாரி ஹிம்மத் சிங் தெரிவித்தார்.

இதற்கிடையே சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேரை ராஜஸ்தான் காவல்துறை அஜ்மீரில் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்