ஜெய்ப்பூரில் தொடர் குண்டு வெடிப்பு: பலி 80 ஆக உயர்வு!
புதன், 14 மே 2008 (10:51 IST)
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 7 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் மக்கள் நெரிசல் மிகுந்த 7 இடங்களில் நேற்று இரவு 7.40 மணிக்கு முதல் குண்டு வெடித்தது. அடுத்த 12 நிமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
சாந்த்போல், சங்கனேர் கேட், திரிபோலியா பஜார், ஜோகரி பஜார், மனாஸ் சவுக், பதி சவுபால், சோட்டி சவுபால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் வெடித்தன. வழிபாட்டு தலங்கள், மார்க்கெட் பகுதிகள் ஆகியவற்றை குறிவைத்து தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தினர்.
திரிபோலியா பஜார் பகுதியில் புகழ்பெற்ற அனுமன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அந்த கோவிலுக்கு வெளியில் குண்டு வெடித்ததால் பலர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புகளில் 60 பேர் பலியானார்கள். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுவதும் பதட்டம் எழுந்தது. வெடிக்காத 3 குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி செயல் இழக்கச் செய்தனர்.
இது தீவிரவாதிகளின் நாசவேலை என்று போலீஸ் டி.ஜி.பி. கில் நிருபர்களிடம் தெரிவித்தார். சக்திவாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். இந்த நிகழ்வை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில எல்லைகள் மூடப்பட்டன.
டெல்லி, மும்பை, ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்கள் உள்பட நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து, ரெயில் நிலையங்கள், சினிமா தியேட்டர்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
டெல்லி சென்றிருந்த ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே, குண்டு வெடிப்பு பற்றிய தகவல் அறிந்தவுடன் அவர் விமானப்படை விமானம் மூலமாக ஜெய்ப்பூருக்கு விரைந்தார்.
தொடர் குண்டுவெடிப்புகளுக்கு குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமைதி காக்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.