புதுச்சேரியில் 76.63 விழுக்காடு தேர்ச்சி: கடந்த ஆண்டை விட குறைவு!
வெள்ளி, 9 மே 2008 (13:50 IST)
புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 4 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 80.66 விழுக்காடும், இந்த ஆண்டு 76.63 விழுக்காடும் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தை போலவே புதுச்சேரியில் இன்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை கல்வித்துறை அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டார்.
தேர்வு எழுதிய 10,922 பேரில் 9,369 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 80.66 விழுக்காட்டை விட இந்த ஆண்டு 76.63 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 4 விழுக்காடு தேர்ச்சி குறைந்துள்ளது என்றார் அமைச்சர் ஷாஜகான்.
இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 5,794 மாணவிகளில் 4,637 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,128 மாணவர்களில் 3,732 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பெத்தி சேமினார் பள்ளி மாணவன் சிறிவர்தன் 1200க்கு 1,183 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இடம் பிடித்துள்ளார். 2வது இடத்தை இதே பள்ளியை சேர்ந்த இம்ராஹிம் ஆசீப் 1,178 மதிப்பெண்ணும், இதே பள்ளியை சேர்ந்த பாலாஜி 1,174 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
1,174 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தை டான் போஸ்கோ பள்ளியும், செயின்ட் பேட்ரிக் பள்ளியும் பிடித்துள்ளது என்று அமைச்சர் ஷாஜகான் கூறினார்.
11 தனியார் பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றாலும், அரசு பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றாலும், கிராமப்புற பள்ளிகளில் 90 விழுக்காடு தேர்ச்சி பெற்றாலும் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.