திபெத் விவகாரத்தை ஐ.நா.வில் இந்தியா எழுப்ப வேண்டும்: ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ்!
புதன், 7 மே 2008 (16:13 IST)
திபெத்திற்கு முழுமையான தன்னாட்சி வழங்கும் விவகாரத்தை, இவ்விடயத்தில் அக்கறை கொண்டுள்ள மற்ற நாடுகளுடன் இணைந்து ஐ.நா.வில் இந்தியா எழுப்ப வேண்டும் என்று முன்னால் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் சமுதாய விழிப்புணர்வு இதழான "தி அதர் சைட்" இதழில் எழுதியுள்ள கட்டுரையில், சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விவகாரமாக திபெத்தில் தற்போது நிலவும் சீன எதிர்ப்புப் போராட்டங்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், இதில் எதுவும் செய்ய முடியாதவாறு ஐ.நா. முடமாக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
திபெத்தில் சீனப் படைகள் மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டிக்கும் விதமாக, சீனத் தலைநகர் பீஜிங்கில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளைச் சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ், இந்தியச் சந்தைகளில் சீனப் பொருட்களைப் புறக்கணித்து இந்தியா தனது எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை திபெத்தியர்களுக்குத் தனிப்பட்ட முறையில் உதவுவதுடன், அவர்கள் தங்கள் தொழிற்சாலைகளையும் உற்பத்திப் பொருட்களின் விற்பனையையும் மேம்படுத்திக்கொள்ள உதவும் என்றார் அவர்.