விலைவாசி உயர்வுக்கு முன்பேர வர்த்தகம் காரணமல்ல-அலுவாலியா!

புதன், 7 மே 2008 (13:45 IST)
முன்பேர வர்த்தகம் தான் உணவுப் பொருட்கள் உட்பட எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

ஸ்பெயின் தலைநகர் மாட்டிரிட்டில் ஆசிய வளர்ச்சி வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசும் போது, முன்பேர வர்த்தக சந்தையில் நடைபெறும் ஊக வணிகமே உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று மக்கள் கருதுகின்றனர். ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அத்துடன் உணவு பொருட்களின் விலை உயர்வை தடுக்க முன்பரே வர்த்தகம் தடை செய்யப்படும் என்றும் ப.சிதம்பரம் சூசமாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் திட்டக் கமிஷனின் துணைத் தலைவரான மாண்டேக் சிங் அலுவாலியா, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் நேற்று புதுடெல்லியில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசும் போது, பண்டக சந்தையில் நடைபெறும் முன்பேர வர்த்தகம், விலை உயரக் காரணமல்ல என்று கூறினார்.

அவர் மேலும் பேசும் போது, அடுத்து வரும் நாட்களில் விலை குறையவில்லை என்றால் அரசு சில நடவடிக்கைகளை எடுக்கும். நாங்கள் இந்த அளவு விலைவாசி உயர்வதையும், பணவீக்கம் அதிகரிப்பதையும் விரும்பவில்லை. இவை குறையும். தேவை ஏற்பட்டால் அரசு சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.

ஆனால் அவர் அரசு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க உள்ளது என்பதை பற்றி விளக்கவில்லை. பணவீக்கம் அதிகரிப்பதை (விலை உயர்வு) தடுக்க உணவு தானியங்களுக்கு முன்பேர வர்த்தகம் தடைசெய்யப்படுமா என்று கேட்டதற்கு பதிலளிக்கும் போது, இதை ஆய்வு செய்த நிபுணர் குழு, முன்பேர வர்த்தகத்தால் பணவீக்கம் அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ளதை அலுவாலியா சுட்டிக்காட்டினார்.

உருக்கு விலை உயர்வை பற்றி கூறும் போது, உருக்கு மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இன்னும் சந்தையில் ஏற்படவில்லை என்று கூறினார்.

(ஏப்ரல் 19ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.57 விழுக்காடாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது).

பணவீக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளால், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறப்படுவதை பற்றி கூறுகையில், இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8 விழுக்காடாக இருக்கும் என்று கூறினார்.

ரிசர்வ் வங்கியின் வருடாந்திர கடன் கொள்கையில், சென்ற நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7 விழுக்காடாக இருந்ததாகவும், இந்த நிதி ஆண்டில் 8 முதல் 8.5 விழுக்காடாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்