பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி : மத்திய அரசு திட்டம்!

செவ்வாய், 6 மே 2008 (16:35 IST)
பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவதற்கான புதிய கொள்கையை மத்திய அரசு ஜூலை மாதம் அமல்படுத்த உள்ளது என்று மத்திய தொழில் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் தெரிவித்தார்.

புவனேஷ்வரில் நேற்று செய்தியாளர்களிடம் அஸ்வினி குமார் பேசும் போது, மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி, நாட்டில் 600 மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதுடன், வேலை இல்லா திண்டாட்டமும் உள்ளது.

இந்த புதிய கொள்கையின் நோக்கம் பின்தங்கிய மாவட்டங்களை தொழில் மயமாக்கும் வகையில், அந்த மாவட்டத்திற்கு ஏற்ற குறிப்பிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்படுத்துவது.

இதன் மூலம் பின்தங்கிய மாவட்டங்கள் தொழில் மயமாக்கப்படுவதுடன், வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கப்படும்.

இந்த கொள்கையை உருவாக்குவதற்கு முன்பு, அந்த மாநில முதலமைச்சர்களிடம், குறிப்பிட்ட மாவட்டம் தொழில் வளர்ச்சி அடையாமல் பின்தங்கி இருப்பதற்கு காரணம் என்ன, இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

தற்போது ஒரு மாநிலம் முழுவதும் ஒரு தொகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதற்கு பதிலாக இனி ஒரு மாவட்டம் மட்டும் ஒரு தொகுதியாக கணக்கில் எடுக்கப்படும். அந்த பின்தங்கிய மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த புதிய கொள்கை மத்திய அமைச்சரவையின் முன் ஜூலை மாதத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்