அணுசக்தி உடன்பாட்டை நடைமுறைப்படுத்த விட மாட்டோம்: இடதுசாரிகள்!
திங்கள், 5 மே 2008 (18:43 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்த அரசை அனுமதிக்க மாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு மிகவும் அவசியமான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாடு தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா நடத்தியுள்ள பேச்சு குறித்து விவாதிப்பதற்காக ஐ.மு.கூ- இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டம் நாளை நடக்கவுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி இப்படிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புது டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி, "123 உடன்பாடு ஹைட் சட்டத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
நாளை நடக்கவுள்ள கூட்டம் பற்றிக் கூறுகையில், "சர்வதேச அணுசக்தி முகமையுடன் என்னவிதமான விவாதங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்பதை இடதுசாரிக் கட்சிகள் தெரிந்துகொள்ளப் போகின்றன" என்றார் அவர்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு மிகவும் அவசியமான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாடு குறித்து சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்திவந்த பேச்சுக்களை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா நிறைவு செய்தது.
ஆனால், இடதுசாரிகளின் தொடர்ச்சியான எதிர்ப்பின் காரணமாக உடன்பாடு கையெழுத்தாகவில்லை.
மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இடதுசாரிகள், தனித்த கண்காணிப்பு உடன்பாட்டின் வரைவைத் தாங்கள் ஆய்வு செய்து ஏற்றுக்கொண்ட பிறகுதான் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தியா அந்த உடன்பாட்டில் கையெழுத்திடுமா என்பது நாளைய கூட்டத்தின் முடிவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக "சர்வதேச அணுசக்தி முகமையுடன் இந்தியா மேற்கொண்ட பேச்சு குறித்து மத்திய அரசு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில், அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்" என்று இடதுசாரிக் கட்சி ஒன்றின் மூத்த தலைவர் பி.டி.ஐ. நிறுவனத்திடம் தெரிவித்தார்.