குண்டூர் மிளகாய்ச் சந்தையில் பயங்கரத் தீ: ரூ.20 கோடி நாசம்!
சனி, 3 மே 2008 (19:23 IST)
ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய மிளகாய்ச் சந்தையில் இன்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்தக்கள் சேதமடைந்திருக்கலாம் என்று முதல்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
மிளகாய்ச் சந்தை வளாகத்தில் உள்ள ஒரு கடையில் இன்று காலை 9 மணியளவில் திடீரென்று பிடித்த தீ, அடுத்தடுத்து மற்ற கடைகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது என்று காவல்துறையினரும், தீயணைப்பு அதிகாரிகளும் தெரிவித்தனர்.
60 ஏக்கர் பரப்பளவிலான சந்தையில் இருந்த சுமார் 500 கிடங்குகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விட்டன.
மாவட்ட ஆட்சியர் தயாரித்துள்ள முதல்கட்ட மதிப்பீட்டின்படி சேத மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என்று, புது டெல்லிக்கு அலுவலாக வந்திருந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்து பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இருந்தாலும், தீ பிடித்தவுடன் அனைவரும் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டதால் இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தீ விபத்து ஏற்பட்டபோது சந்தையில் 1.25 லட்சம் மிளகாய்ப் பைகள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
காய்ந்த மிளகாய்கள் மொத்தமாகத் தீப் பிடித்து எரிந்ததால் அப்பகுதியை யாரும் நெருங்க முடியவில்லை. சுமார் 42 டிகிரி அளவிற்கு வெப்பம் வீசியதால் தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
தீயைக் கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் குண்டூர் மற்றும் அதனருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 15 தீயணைப்பு வண்டிகள் ஈடுபட்டுள்ளன.
இருந்தாலும் இன்று இரவுதான் தீயை முழுமையாக அணைக்க முடியும் என்று தீயணைப்பு அதிகாரி அருணா பகுகுனா தெரிவித்தார்.