32 எம்.பி.க்கள் மீது நடவடிக்கைக்கு பரிந்துரை: சோம்நாத் சாட்டர்ஜி!
வெள்ளி, 2 மே 2008 (12:29 IST)
நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 32 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமை குழுவுக்கு அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி பரிந்துரை செய்துள்ளார்.
விலை உயர்வு குறித்து அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரி மக்களவை, மாநிலங்களவையில் ஏப்ரல் 24ஆம் தேதி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்றைய தினம் மக்களவையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவை நிகழ்ச்சிகள் எதையும் நடத்த முடியவில்லை.
இந்த நிலையில், இவ்வாறு அவையில் அமளியில் ஈடுபட்ட 32 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு உரிமை குழுவுக்கு அவைத் தலைவர் சோம்நாத் கடந்த 30ஆம் தேதி பரிந்துரை செய்துள்ளார்.
பா.ஜ.க உறுப்பினர்கள் ஷாநவாஸ் ஹுசைன், பி.எஸ்.காந்தவி, கிஷன் சிங் சங்வான், கிரின் மகேஸ்வரி கூட்டணிக் கட்சிகளான சிவசேனை, சிரோன்மணி அகாலிதளம், பிஜு ஜனதாதளம் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி உறுப்பினர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பகுஜன் சமாஜ் உறுப்பினர் பதக் பெயரும் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவையில் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக் குழுவுக்கு அனுப்புவது வழக்கம் இல்லை. ஆனால் அண்மைக்காலமாக மக்களவையில் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதில் அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் சோம்நாத், வேலை இல்லையேல் ஊதியம் இல்லை கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அதாவது அவை நடவடிக்கை நடக்கவில்லை என்றால் அன்று உறுப்பினர்களுக்கு சம்பளம் இல்லை. ஆனால் இதை எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. உறுப்பினர்களின் நடவடிக்கைகளில் தொடர்ந்து அதிருப்தியில் இருந்த சோம்நாத், "நடந்ததெல்லாம் போதும் அவையின் கண்ணியமும் கவுரவமும் காக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.