டாடா டெலிசர்வீஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மேல் முறையீடு தள்ளுபடி!

புதன், 30 ஏப்ரல் 2008 (16:58 IST)
டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தின் ‘வால்கி’ தொலைபேசி இணைப்பும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் (முன்பு இன்போகாம்) ‘அன்லிமிடெட் கார்ட்லெஸ் ொலைபேசி இணைப்பும் மொபைல் போன் இணைப்புகள் என கூறி, இந்த இரு நிறுவனங்களும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கின் விபரம் வருமாறு :

டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் வால்கி என்ற பெயரில் தொலைபேசி இணைப்பு வழங்கியது.

இதே போல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் அன்லிமிடெட் கார்ட்லெஸ் என்ற பெயரில் தொலைபேசி இணைப்பு வழங்கியது.

இந்த தொலைபேசியை வாங்கியவர்கள் குறிப்பிட்ட தூரம் வரை இதனை கையில் எடுத்துக் கொண்டு சென்று பேசலாம். சாதாரண தொலைபேசி போல் வயர் இணைப்பு இருக்காது. இவை வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் இயங்குகின்றன.

இவை சாதாரண தொலைபேசி இல்லை, செல் தொலைபேசி போல் இயங்குவதால், இதற்கு டாடா டெலிசர்வீஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இணைப்பை பயன்படுத்துவதற்கு ஈடாக, அசஸ் டெபிசிட் சார்ஜ் எனப்படும் கட்டணத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என பி.எஸ்.என்.எல். கூறியது.

இதை எதிர்த்து டாடா டெலிசர்வீஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும் தொலை தொடர்பு விசாரணை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த இரண்டு நிறுவனங்களும் சாதாரண தொலைபேசிதான், செல் போன்று அல்ல என வாதிட்டன. இந்த வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், டாடா டெலிசர்வீஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கருத்தை தள்ளுபடி செய்தது. இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ள தொலைபேசி சேவை, குறிப்பிட்ட சுற்றளவு வரை இயங்கும் செல்போன் சேவைதான் என்று கூறி, இரண்டு நிறுவனங்களும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதன் தீர்ப்பை எதிர்த்து இரண்டு நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஹெச்.எஸ்.கபாடியா, நீதிபதி பி.சுதர்ஸன் ரெட்டி ஆகியோரை கொண்ட அமர்வு நீதி மன்றம், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. தொலை தொடர்வு நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு சரியானது என்று கூறியது.

இதன்படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ரூ.400 கோடி வழங்க வேண்டும்.

இதே போல் டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு ரூ.300 கோடி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்