பணவீக்கத்திற்கு எதிராகப் போராடுவது தொழில்துறையின் சமூகக் கடமை: பிரதமர்!
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (19:12 IST)
விலைவாசி உயர்விற்குக் காரணமான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசிற்கு உதவுவது தொழில்துறையின் சமூகக் கடமை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
இதுகுறித்துத் தலைநகர் டெல்லியில் நடந்த தொழில்துறை மாநாட்டில் பேசிய அவர், குறைந்த கால ஆதாயத்தை எதிர்பார்க்கும் போக்கைக் கைவிடுமாறு எச்சரித்தார்.
"குறைந்த கால ஆதாயத்தை எதிர்பார்த்துச் செயல்படும் போக்கைத் தொழில் மற்றும் வர்த்தகத்துறையினர் கைவிட வேண்டும். பொருளாதார வளர்ச்சி நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பதை உறுதி செய்யும்பொருட்டு அரசுடன் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும்" என்றார் அவர்.
அண்மையில் அதிகரித்துள்ள விலைவாசியைக் குறைக்க அரசு தரப்பில் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் உதவுவது தொழில்துறையின் சமூகக்கடமை என்பதை மறந்துவிடக் கூடாது என்றார்.
கூட்டணி அமைத்துப் பற்றாக்குறையை உருவாக்கும் போக்கிற்கு எதிராக மறைமுக எச்சரிக்கை விடுத்த பிரதமர், "தொழில்துறையின் முன்னோடிகள், குறிப்பாக இந்தக் குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள் கைகளில்தான் சந்தை வளர்ச்சியை நிர்ணயிக்கும் அதிகாரம் உள்ளது என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசிற்கு உள்ள எதிர்பார்ப்புகள் நிறைவேற உதவ வேண்டிய சமூகக்கடமை உள்ளது" என்றார்.
பணவீக்க உயர்விற்கான காரணங்களை, குறிப்பாக உலகளவில் அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் உணவு விலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கிய பிரதமர், அதற்கேற்றவாறு அரசு வழங்கும் வரிச்சலுகைகளின் பயன்களை நுகர்வோருக்கு தொழில்துறையினர் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.