கண்காணிப்பு உடன்பாட்டின் வரைவைப் படிக்கவில்லை: இடதுசாரிகள்!
புதன், 23 ஏப்ரல் 2008 (18:07 IST)
சர்வதேச அணுசக்தி முகமையுடன் பேச்சு நடத்தி இறுதி செய்யப்பட்டுள்ள, இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு அவசியான தனித்த கண்காணிப்பு உடன்பாட்டின் வரைவை தாங்கள் படிக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டைத் தாங்கள் தொடர்ந்து எதிர்ப்பதாகவும், மே 6 ஆம் தேதி நடக்கவுள்ள ஐ.மு.கூ. - இடதுசாரிகள் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் தங்களின் நிலைபாட்டைத் தெரிவிக்க உள்ளதாகவும் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி கூறினார்.
இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனித்த கண்காணிப்பு உடன்பாட்டின் வரைவு தங்களிடம் வழங்கப்படவில்லை என்றார்.
முன்னதாகச் சில ஊடகங்கள், அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கான தனித்த கண்காணிப்பு உடன்பாட்டின் வரைவை இடதுசாரிகளிடம் மத்திய அரசு வழங்கி உள்ளதாகத் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து நடக்கவிருக்கும் கூட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து இன்னும் சில விளக்கங்களைத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும், அவை குறித்து கூட்டத்திற்குப் பிறகு தெரிவிப்பதாகவும் யச்சூரி கூறினார்.