சிமெண்ட் - உருக்கு கூட்டணி: சிதம்பரம் குற்றச்சாட்டு!
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (16:55 IST)
சிமெண்ட், உருக்கு உற்பத்தியாளர்கள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையை உயர்த்தி வருவதால் ஏற்படும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த, இவர்கள் மீது சட்ட, நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இன்று துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில், என்னுடைய கருத்துபடி சிமெண்ட் உற்பத்தியாளர்களும், சில உருக்கு உற்பத்தியாளர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர் என்று சிதம்பரம் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை ஏகபோக வர்த்தக தடை (எம்.ஆர்.பி.டி.சி. ) கமிஷனின் விசாரணைக்கு விடப்படுமா என்று கேட்டதற்கு சிதம்பரம் பதிலளிக்கையில், அரசின் அதிகாரத்திற்கு ஏற்ப சட்ட மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க நாங்கள் ஆலோசித்து வருகின்றோம் என்று தெரிவித்தார்.
உருக்கு ஆலைகள் கூட்டணி அமைத்துக் கொண்டதற்கான சான்று இல்லை. எனவே இதை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்பு ஏற்படுத்தும் தேவை ஏற்படவில்லை என்று உருக்குத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத், சென்ற 17 ந் தேதி மக்களையில் எழுத்து பூர்வமான கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும் போது, சந்தையின் தேவையை பொறுத்தே உருக்கு விலை உள்ளது. சந்தையில் சரக்கு கிடைக்கும் அளவு, இதன் மொத்த தேவைகள், உலக நாடுகளில் விலை ஆகியவை பொருத்தே உருக்கு விலைகள் சந்தையில் உள்ளன.
உருக்கு விலையை நிர்ணயிக்கும் விதத்தில் உருக்கு ஆலைகள் கூட்டணி அமைத்துள்ளதற்கான எவ்வித சான்றுகளும் உருக்கு அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.