இந்திய ஹாக்கி கூட்டமைப்பை கலைக்க வேண்டும்: மாநிலங்களவை உறுப்பினர்கள்!
செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (16:40 IST)
இந்திய ஹாக்கி அணிக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பை கலைத்திட வேண்டும் என்று மத்திய அரசை மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
ரூபாய் 5 லட்சம் தந்தால் இந்திய அணிக்கு தேர்வாகலாம் என்பதை இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலர் ஜோதி குமரனிடம் ரகசிய பேரம் நடத்தி, லஞ்சப் பணத்தை அளித்து ஹாக்கி தேர்வில் நடைபெற்றுவரும் ஊழலை ஆஜ்தக் தொலைக்காட்சி வெளிப்படுத்தியது.
தேசத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்திய இப்பிரச்சனை இன்று மாநிலங்களவையில் எதிரொலித்தது.
லஞ்சம் பெற்றுக்கொண்டு விரர்களைத் தேர்வு செய்ததின் மூலம் அவர்களை சந்தைப் பொருளாக்கிவிட்டது ஹாக்கி கூட்டமைப்பு என்று குற்றம்சாற்றிய சமாஜ்வாடி உறுப்பினர் ஷாஷித் சித்திக், இந்த நிலை ஹாக்கியில் மட்டுமின்றி மற்ற விளையாட்டுகளிலும் உள்ளது என்று கூறினார்.
ஆஜ்தக் தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ள உண்மை இந்த தேசத்திற்கே தலைக் குனிவை ஏற்படுத்திவிட்டது என்ற சித்திக், இதேபோன்ற பங்குச் சந்தையாகத்தான் இருபதிற்கு 20 கிரிக்கெட்டும் உள்ளது என்றார்.
இந்திய ஹாக்கி கூட்டமைப்பை மத்திய விளையாட்டு அமைச்சகம் உடனடியாக கலைத்திட வேண்டும் என்றும், அதன் தலைவர் கில் பதவி விலக வலியுறுத்த வேண்டும் என்றும் சித்திக் விடுத்த கோரிக்கைக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் அரசுக்கு இல்லையென்றால், அந்த அதிகாரத்தை வழங்க நாடாளுமன்றம் தயாராக உள்ளது என்று மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர் மொஹம்மது சலீம் கூறினார்.
இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏன் தகுதிபெறவில்லை என்பதை இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் வெட்கமற்ற நடவடிக்கை எடுத்துக்காட்டி விட்டது என்றார் சமாஜ்வாடி கட்சியின் மற்றொரு உறுப்பினரான மோகன் சிங்.
கேள்வி கேட்பதற்கு லஞ்சம் பெற்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மக்களவைக்கு உள்ளதென்றால், வீரர்களைத் தேர்வு செய்வதற்கு லஞ்சம் பெற்றவர்களை ஏன் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று மோகன் சிங் கேள்வி எழுப்பினார்.
இது ஒரு தேச அவமானம் என்று கூறிய ராஷ்ட்ரிய ஜனதா தள உறுப்பினர் தேவேந்திர பிரசாத் யாதவ், இப்படிப்பட்ட அமைப்புகளை கலைக்கும் அதிகாரத்தை அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.