லஸ்கர்-இ-தொய்பாவுடன் சிமிக்கு தொடர்பு!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (15:03 IST)
தடைசெய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கமான சிமி அமைப்பினருக்கு லஸ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று இது குறித்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் இதனை தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு முதல் சிமி இயக்கத்தை சேர்ந்த 181 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மத்தியப் பிரதேசத்திலிருந்து மட்டும் 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், விசாரணையில் இவர்களுக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.

இது போன்ற அமைப்புகள் தீவிரக் கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும், நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஜைஸ்வால், மார்ச் 31ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானுக்கு அளித்த பட்டியலின் படி 133 பாகிஸ்தானியர்கள், 13 மீனவர்கள் ஆகியோர் பல்வேறு இந்திய சிறைகளில் உள்ளனர்.

அதே போல் 436 மீனவர்கள், 53 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என்று பாகிஸ்தான் பட்டியல் அளித்துள்ளது என்று கூறினார். ஆனால் இவர்களை விடுவிப்பது பற்றி எந்த ஒரு கால நிர்ணயமும் இதுவரை செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்