மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய சோஷலிச ஐக்கிய மையத்தைச் (எஸ்.யூ.சி.ஐ.) சேர்ந்த தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் செய்தனர். இதனால் ஹவ்ரா, சியால்டக் ஆகிய கோட்டங்களில் நீண்டதூர ரயில், புறநகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
தனியார் பேருந்துகள், கார்களும் ஓடவில்லை. இதனால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் கொல்கத்தா நகரச் சாலைகள் வெறிச்சோடின.
முழு அடைப்பின் போது 8 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்டதுடன் வன்முறைக்கும் வித்திட முயன்ற 250 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஐ.ஜி. ராஜ் கனோஜியா தெரிவித்தார்.
அதே நேரத்தில் சுரங்க ரயில், விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமான வருகையும் புறப்பாடும் வழக்கம் போல் நடந்தது.