3.7 கோடி போலி ரேஷன் அட்டைகள் புழ‌க்க‌ம்- அரசு!

திங்கள், 21 ஏப்ரல் 2008 (15:46 IST)
நமது நா‌ட்டி‌ல் சுமா‌ர் 3.7 கோடி போ‌லி ரேஷ‌ன் அ‌ட்டைக‌ள் புழ‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ளதாக ம‌த்‌திய அரசு கூ‌றியு‌ள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 10.28 கோடி குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியதாக மாநில அரசுக‌ள் தெரிவித்திருந்தன. ஆனால் 6.52 கோடி குடும்பங்கள் மட்டுமே வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளதாக அதிகாரபூர்வ கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் ஷரத் பவார் திட்டக் குழுவின் மதிப்பீட்டை மேற்கோள் காட்டி கூறுகையில், சுமார் 3.7 கோடி போலி ரேஷன் அட்டைகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது அந்தந்த மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சில மாநில அரசுகள் பல்வேறு குடும்பங்களின் ரேஷன் அட்டைகளை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று ஷரத் பவார் கூறியதோடு, சட்ட விரோதமாக ரேஷன் அட்டைகளை வைத்திருப்போர் மீதும், அதனை வழங்கிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஆந்திரம், அசாம், குஜராத், மத்திய‌ப் பிரதேசம், டெல்லி, ஒரிசா உட்பட 13 மாநில அரசுகள் சுமார் 67.45 லட்சம் போலி ரேஷன் அட்டைகளை ரத்து செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மு‌ன்னதாக கேள்வி நேரத்தின் போது பே‌சிய பா.ஜ.க. கட்சி உறுப்பினர் மேனகா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள் பலவற்றுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை என்று கூறியதோடு, மத்திய அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்