பாதுகாப்பு, குடிமைப் பணி அதிகாரிகளுக்கு சலுகைகள்: பிரதமர் உறுதி!
திங்கள், 21 ஏப்ரல் 2008 (13:28 IST)
இந்தியக் குடிமைப் பணி, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகள் முறைப்படி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட 6 ஆவது ஊதியக்குழு அறிக்கையில் இந்தியக் குடிமைப் பணி, பாதுகாப்பு அதிகாரிகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகக் குற்றச்சாற்றுகள் எழுந்திருந்த நிலையில், பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைநகர் புது டெல்லியில் இன்று இந்தியக் குடிமைப் பணிகள் நாள் விழாவைத் துவங்கிவைத்த பிரதமர் மன்மோகன் சிங், அதிகாரிகளிடையில் பேசுகையில் அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்.
"நமது குடிமைப் பணித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை ஆகியவற்றுக்கு உரிய சலுகைகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மக்களின் நலன்களுக்காக மிகத் திறமையாகப் பணியாற்றிவரும் வரை நம் யாருடைய நலனும் பாதிக்கப்படாது என்று நான் நம்புகிறேன்" என்றார் அவர்.
6 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மறுஆய்வு செய்வதற்காகக் குழு அமைக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அரசு ஊழியர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஏற்கெனவே எடுத்துள்ளது என்றார்.
தனது எல்லா ஊழியர்களின் நலன்களையும் சமமாகப் பாவித்துப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதென்றும், எல்லாக் குடிமைப் பணி அதிகாரிகளும் மிகச் சிறப்பாகவும், திறமையாகவும் பணியாற்ற வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.