பல மாநில அரசுகள் தங்கள் சட்டப் பொறுப்புகளை சரிவர கவனிப்பதில்லை என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், குடும்ப நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் இன்று இதனை தெரிவித்தார்.
வழக்குகள் தேங்கிக் கிடப்பதோடு, சமூக, பொருளாதார அளவில் பின் தங்கிய வகுப்பினர் தங்கள் வழக்கு விசாரணைகளுக்கு நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது இதற்கு கூடுதல் நீதிமன்றங்களை அமைத்து வழக்குகளை தேக்கமில்லாமல் விரைவில் முடிக்க மாநில அரசுகள் முன் வரவேண்டும் என்றார்.
குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் ஒரு சமூக நல திட்டமாகும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த, இந்த விவகாரத்தில் தலையிட, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், குடும்ப நீதிமன்றங்கள் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் என்று கடிதம் எழுதியதையடுத்து பிரதமர் இதனை மேலும் வலியுறுத்தியுள்ளார்.
10 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் நகர்ப்பகுதிகளில் குடும்ப நீதிமன்றங்களை மானில அரசுகள் அமைக்க வேண்டிய கட்டாயத்தை "குடும்ப நீதிமன்றங்கள் சட்டம், 1984" வலியுறுத்தியுள்ளது.
இது பற்றி மேலும் பிரதமர் பேசுகையில், நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த கணினி மயமாக்கம் உள்ளிட்ட பல்வேறு நவீன சாத்தியக் கூறுகளையும் மானில அரசுடன் மத்திய அரசு விவாதிக்கத் தயாராக உள்ளது என்றார்.