40 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா- டாக்கா ரயில்சேவை துவங்கியது!
திங்கள், 14 ஏப்ரல் 2008 (12:39 IST)
சுமார் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கொல்கத்தா- டாக்கா இடையிலான ரயில் சேவை இன்று துவங்கியது.
வங்காளப் புத்தாண்டு தினமான இன்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியா- பாகிஸ்தான் மக்களிடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக கொண்டுவரப்பட்ட மொய்ட்ரீ விரைவு ரயில் தனது முதல் பயணத்தைத் துவக்கியது.
முன்னதாக, மொய்ட்ரீ விரைவு ரயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கொல்கத்தா ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
காலை 7.30 மணியளவில் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பிரமுகர்களும், அதிகாரிகளும் புடைசூழ்ந்து வாழ்த்திய நிலையில், தொலை இயக்கி மூலம் ரயிலின் பயணத்தைத் துவக்கி வைத்தார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
அப்போது பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கொல்கத்தா- டாக்கா ரயில் சேவையை அறிமுகம் செய்த ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்திற்கு நன்றி தெரிவித்தார்.
மொத்தம் 6 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் கொல்கத்தா- டாக்கா கண்டோன்மென்ட் ரயில் நிலையங்களுக்கு இடையில் வாரம் இரண்டுமுறை இயக்கப்படும்.
ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.10 மணிக்கு கொல்கத்தாவில் புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு டாக்காவை அடையும். டாக்காவில் இருந்து காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு கொல்கத்தாவிற்கு இரவு 9 மணிக்கு வந்துசேரும்.
இந்தியாவில் இருந்து புறப்படும் ரயிலில் 368 பயணிகளும் வங்கதேசத்தில் புறப்படும் ரயிலில் 418 பயணிகளும் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.