திபெத்தியர்களின் போராட்டத்தைத் தடுக்க முடியாது: இந்தியா!
சனி, 12 ஏப்ரல் 2008 (11:13 IST)
இந்தியாவில் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை எதிர்த்து திபெத்திய அகதிகள் நடத்தும் போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாதென்று சீனாவிடம் இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அதேநேரத்தில், ஒலிம்பிக் சுடர் ஓட்டம் பாதுகாப்பாக நடைபெறுவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் உரிய முறையில் செய்யப்படும் என்றும் இந்தியா உறுதியளித்துள்ளது.
ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதற்கு மேற்குவங்க அரசு தடை விதித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. இதனடிப்படையில், மேற்குவங்கத்தைப் போல இந்தியா முழுவதும் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்திற்குத் தடை விதிக்க முடியுமா என்று சீனா கேட்டது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அயலுறவு அமைச்சகம், சட்டம்- ஒழுங்கு என்பது அந்தந்த மாநிலத்தின் பிரச்சனை. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாநிலமும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும். ஆனால் மத்திய அரசளவில், யாருடைய கருத்துரிமையையும் நசுக்குவதற்கான கொள்கை எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
மேலும், ஒரு ஜனநாயக நாடு என்ற முறையில் கருத்துரிமையின் மீது இந்தியாவிற்கு நம்பிக்கை உள்ளது. இதனடிப்படையில் ஏப்ரல் 17 ஆம் தேதி ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடக்கும்போது கூட யாருடைய கருத்துரிமையும் பறிக்கப்பட மாட்டாது.
திபெத்தியர்கள் உள்பட யாராக இருந்தாலும், இந்த மண்ணின் சட்டங்களுக்கு உட்பட்டு தங்களுடைய கருத்துக்களை அமைதியாகவும் ஜனநாயக பூர்வமாகவும் வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உள்ளது என்று இந்தியா நம்புகிறது.
அதேநேரத்தில், ஒலிம்பிக் சுடர் ஓட்டம் அதற்குரிய பெருமை குறையாமல் நடக்கத் தேவையான எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.