உணவுப் பொருட்களின் விலை உயர்வு பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்: பிரதமர்!
வியாழன், 10 ஏப்ரல் 2008 (20:43 IST)
அதிகரித்துவரும் பணவீக்கத்தால் ஏற்படும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பொருளாதார வளர்ச்சியையும், சீர்திருத்தத் திட்டங்களையும் தடம்புரளச் செய்யக் கூடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கண்மூடித்தனமான கட்டுப்பாடுகள் எதையும் கடைபிடிப்பது சாத்தியமில்லை, அது இன்னும் அதிக பாதிப்பை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
புது டெல்லியில் இன்று குலோபல் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றவை சீர்திருத்தங்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளையும் பொருளாதாரத் திட்டங்களையும் தடம்புரளச் செய்யக் கூடும்.
விண்ணை முட்டும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இன்னும் கடினமாக்குவதுடன், பொருளாதார நிலைத் தன்மையையும் பாதிக்கும்" என்றார்.
பணவீக்க அடிப்படையிலான ஒட்டுமொத்த விலைகள் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாகப் பல்வேறு பொருளாதார அமைப்புகள் கூறியுள்ளன.
இருந்தாலும், தற்போதுள்ள சிக்கலான சூழ்நிலையை கண்மூடித்தனமான கட்டுப்பாடுகள் மூலம் தீர்க்க முடியாது. விவசாயம் தொடர்பாக வர்த்தகத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் அது விவசாயிகளின் நலனைப் பாதிப்பதுடன், நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் என்றார் பிரதமர்.
"உலகளாவிய வர்த்தக நிலவரத்தையும் உணவுப் பொருட்கள் விலையையும் பற்றி இந்தியாவில் உள்ள நாமும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலை நிலவரம், வறுமை ஒழிவதை தாமதமாக்கிவிடும், பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் பாதித்துவிடும்" என்றார் அவர்.
கச்சா எண்ணை விலை உயர்வைக் கருத்தில் கொண்டு அனைவரும் உயிரி- எரிபொருட்களுக்கு மாறிவரும் நிலையும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது என்றார் பிரதமர்.