உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு!
வியாழன், 10 ஏப்ரல் 2008 (17:11 IST)
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், "இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. காங்கிரஸ் தலைமயிலான மத்திய அரசின் குறிப்பிடத்தக்க பாராட்டத்தக்க ஒரு முயற்சி" என்றார்.
"இந்த நடவடிக்கையின் அடிப்படை புரிந்துகொள்ளப்பட வேண்டியதுடன் பாராட்டப்பட வேண்டியதும் ஆகும். மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முயற்சிகளின் பலன்கள் நிச்சயமாக மக்களிடம் கொண்டு செல்லப்படும்" என்றும் அவர் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வரவேற்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
"மேலும், இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை (கிரீமி லேயர்) தவிர்ப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டின் உண்மையான பலன்கள் உரியவர்களுக்கு சென்று சேரும்" என்று மார்க்சிஸ்ம் கட்சி கூறியுள்ளது.
ஃபார்வார்ட் பிளாக் கட்சியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளது.
"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். இட ஒதுக்கீட்டை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்" என்று ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலர் அனில் பிஸ்வாஸ் கூறினார்.